பிகாரில் யானை மீது புலி ஏற்றப்பட்டு, அதை மக்கள் கயிற்றால் அழைத்து செல்கிறார்கள் என்று வைரலாகி இருக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்து, “இது உண்மைதான், பிகாரில் இதுபோன்ற விஷயங்கள் மட்டுமே நடக்கின்றன” என்ற கருத்துக்கள் உண்டாகியுள்ளன. ஆனால், இது உண்மையா? அல்லது பொய்யாக பரப்பப்படுகிறதா என்பது குறித்து கேள்விகள் எழுகிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோ, எளிதில் நம்ப முடியாததாக இருக்கலாம், ஏனென்றால் நவீன தொழில்நுட்பங்களால் பொய்யான தகவல்களும் விரைவில் பரவுகின்றன. இந்நிலையில், இந்த வீடியோ ஆராய்ந்த பிறகு அதன் பின்னணி வெளியானது.
இந்த வீடியோவில், யானையின் மீது இரண்டு பேர் அமர்ந்து, அந்த யானை சாலையில் சென்று கொண்டிருக்கின்றது. அவர்களுக்கிடையில், கயிற்றால் கட்டப்பட்ட புலி ஒன்று அமர்த்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வேடிக்கை சம்பவம், பிகாரில் தான் நடந்ததென சிலர் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, பிசிசிஐ முன்னாள் தலைவர் ராஜீவ் சுக்லா இந்த வீடியோவை பகிர்ந்திருப்பது பெரிய கவனத்தை பெற்றுள்ளது.
ஆனால், இந்த வீடியோ முழுமையாக தவறானது என்பது கண்டறியப்பட்டுள்ளது. கீ பிரேம்கள் மற்றும் ரிவர்ஸ் இமேஜ் தேடலின் மூலம் இந்த வீடியோவின் மூலத்தை ஆராய்ந்த போது, அது உத்தரகாண்ட் மாநிலத்தில் 2011ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் என்று தெரிய வந்தது. அந்த சமயத்தில், வனத்துறையினர் ஒரு புலியை கொன்றுவிட்டனர், அது 6 பேரை தாக்கி கொன்றதாக கூறப்படுகிறது. பின்னர், அந்த புலி யானை மீது ஏற்றி, ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டது. இது 2012 ஜனவரி 15ஆம் தேதி நீண்ட வீடியோவாக வெளியிடப்பட்டது.
இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தும் வகையில், பிரவீன் கஸ்வான் என்ற ஐ.எஃப்.எஸ் அதிகாரி, தன் எக்ஸ் வலைதளத்தில் அந்த சம்பவத்தை விளக்கிவைத்துள்ளார். அதனால், இந்த வீடியோ உண்மையில் பிகாரில் நடந்ததல்ல, அது உத்தரகாண்ட்டில் நடந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது.
இதன் மூலம், அந்த வீடியோவை பிகாரில் நிகழ்ந்ததாக பரப்புவது தவறானது. அது கொல்லப்பட்ட புலி பற்றிய செய்தி ஆகும்.