பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. பொருளாதார நெருக்கடி, ருவாண்டாவுக்கு அகதிகள் திரும்புதல் போன்ற பிரச்னைகள் இந்தத் தேர்தலில் முக்கியத்துவம் பெற்றன.
இந்திய மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு உலகமே இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலை உற்று நோக்குகிறது. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு நடக்கும் முதல் தேர்தல் இதுவாகும். மேலும், கடந்த 14 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த தேர்தலில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.
14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த போதிலும், வளர்ந்து வரும் பொருளாதார நெருக்கடியால் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி மீது மக்கள் கோபமடைந்தனர். ரிஷி சுனக் பிரதமரான பிறகு, பொருளாதாரத்தில் சில முன்னேற்றம் ஏற்பட்டது, ஆனால் ரிஷி சுனக் முன்பு ஏற்பட்ட நிர்வாக சீர்கேட்டை முழுமையாக நீக்க முடியவில்லை. பணவீக்கம் குறைந்து வருவதாக கூறப்பட்டாலும், மக்கள் தீர்வு காண தயாராக இல்லை. மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. மறுபுறம், ருவாண்டாவுக்கு அகதிகளை அனுப்புவதும், அவர்கள் பிரிட்டனுக்குள் நுழைவதைத் தடை செய்வதும் கன்சர்வேட்டிவ் கட்சியை உலுக்கியது.
பிரிட்டிஷ் தேர்தலில் ரிஷி சுனக் மீண்டும் வெற்றி பெறுவாரா? கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?
இந்த நிலையில்தான் நேற்று பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பின்னடைவைச் சந்திக்கும் என்றும், தொழிற்கட்சி அமோக வெற்றி பெறும் என்றும் கணித்திருந்தது. ரிஷி சுனக் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும், கெய்ர் ஸ்டார்மர் தொழிலாளர் கட்சியின் தலைவராகவும் உள்ளனர்.
தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, தொழிலாளர் கட்சி 304 இடங்களிலும், கன்சர்வேட்டிவ் கட்சி 63 இடங்களிலும், லிபரல் டெமாக்ராட்ஸ் 27 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளின்படி, தொழிலாளர் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
கடந்த 2019 தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி 365 இடங்களில் வெற்றி பெற்று, போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார். (இதற்கிடையில் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன் பதவி நீக்கம் செய்யப்பட்டு ரிஷி சுனக் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்). எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 202 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இம்முறை பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியர்கள் அதிகளவில் போட்டியிடுகின்றனர். குறிப்பாக எட்டு தமிழர்கள் போட்டியிடுகின்றனர்.
“பிரிட்டிஷ் மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர்,” என்று வெற்றிப் பாதையில் செல்லும் தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் கூறினார். இன்று முதல் மாற்றம் தொடங்கியுள்ளது,” என்றார்.
2019 தேர்தலில் மொத்தம் 15 பிரிட்டிஷ் இந்தியர்கள் போட்டியிட்டனர். இது தற்போது 107 பிரிட்டிஷ் இந்தியர்களாக அதிகரித்துள்ளது. மொத்தமுள்ள 680 தொகுதிகளில் முதன்முறையாக ஏராளமான இந்தியர்கள் போட்டியிடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று வெளியான தேர்தல் முடிவுகளில், பிரித்தானிய இந்தியர்களில் லீசெஸ்டர் கிழக்கில் தொழிலாளர் கட்சி சார்பில் ஷிவானி ராஜா, வேல்ஸ் தொகுதியில் இருந்து தொழிலாளர் கட்சி சார்பில் கனிஷ்க நாராயண், பர்ஹாம் தொகுதியில் சுலே பிரேவர்மன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி 300க்கும் மேற்பட்ட இடங்களை தொழிலாளர் கட்சி பெற்றுள்ள நிலையில், அக்கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. தொழிலாளர் கட்சியின் தலைவரான கெய்ர் ஸ்டார்மர் பிரதமராக வருவார். மறுபுறம், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரும் தற்போதைய பிரதமருமான ரிஷி சுனக் அவர்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளார்.