விஜயவாடா: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம், கொண்டா வெங்கடபையா காலனியை சேர்ந்தவர் மதுபாபு (30). இவர் குண்டூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மதுபாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். என் தொழிலை இழந்தேன். இதை சமாளிக்க ஆன்லைன் மூலம் கடன் வாங்கினேன். கடனை அடைக்க முடியாமல் தவித்தனர். பலரிடம் கடன் கேட்டேன். யாரும் உதவவில்லை. அப்போது ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான பாஷா, ‘நீ சிறுநீரகம் தானம் செய்தால் ரூ.30 லட்சம் தருகிறேன்’ என்றார். எனது கடனை அடைத்துவிட்டு எனது குடும்பத்தை கவனித்துக் கொள்ளலாம் என்று நினைத்து எனது சிறுநீரகத்தை தானமாக கொடுக்க ஒப்புக்கொண்டேன். பாஷா என்னை இடைத்தரகர் வெங்கட் ஒருவரிடம் அழைத்துச் சென்றார், அங்கு அவர் எனக்கு முன்பணமாக ரூ.59,000 கொடுத்தார்.
அதன்பின், விஜயவாடாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். உறவினர்கள் மட்டுமே சிறுநீரக தானம் செய்ய வேண்டும் என்ற சட்டம் உள்ளதால், எனது ஆதார் அட்டையை கூட தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டனர். எனது இடது சிறுநீரகத்தை எடுத்து வெங்கடசாமி என்ற நோயாளிக்கு கொடுப்பதாக கூறி, கடந்த மாதம் 15ம் தேதி அறுவை சிகிச்சை செய்தனர். கண்விழித்து பார்த்தபோது இடது சிறுநீரகத்திற்கு பதிலாக வலது சிறுநீரகம் எடுக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
ஒப்பந்தப்படி எனக்கு ரூ.30 லட்சம் வழங்கப்படவில்லை. நோயாளியின் உறவினர் சுப்ரமணி, இடைத்தரகர் வெங்கட், மருத்துவர் சரத்பாபு ஆகியோரிடம் கேட்டபோது, ‘‘கிட்னியை எடுத்துவிட்டு உன் உயிரை எடுக்க எவ்வளவு நேரம் ஆகும்’’ என மிரட்டினர். ஏமாற்றப்பட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு மதுபாபு கூறினார்.
இது தொடர்பாக குண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், விஜயவாடாவை மையமாக கொண்டு இதுபோன்ற சிறுநீரக மோசடி நடந்த சம்பவம் குறித்தும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா, நேற்று விஜயவாடா போலீஸ் கமிஷனர், குண்டூர் கலெக்டர், எஸ்பி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீதும், சம்பந்தப்பட்டவர்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
டாக்டர் சரத்பாபு விளக்கம்: விஜயவாடாவில் உள்ள சரத் இன்ஸ்டிடியூட் ஆப் நெப்ராலஜி மற்றும் யூராலஜி மருத்துவமனை தலைவர் டாக்டர் சரத்பாபு நிருபர்களிடம் கூறுகையில், ”அரசு விதிப்படி தகுதியான நோயாளிக்கு சிறுநீரகம் மாற்றப்பட்டுள்ளது. சிறுநீரகத்தை நோயாளிக்கு அவரது உறவினர் மதுபாபு தானமாக வழங்கினார். மதுபாபு சொல்வதில் உண்மை இல்லை,” என்றார்.