சீனாவின் தாக்குதலை முறியடிக்க வேண்டும் என்பதற்குப் பதிலாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்தியாவின் தேசப் பாதுகாப்பையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் ஆபத்தில் ஆழ்த்திவிட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பதிவில், சீனாவுக்கு எதிராக இந்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார். “சீனாவுக்கு சிவந்த கண்களை காட்டுவதற்குப் பதிலாக, பிரதமர் மோடி சிவப்பு கம்பள வரவேற்பை அளிக்கிறார்” என அவர் விமர்சித்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேச எல்லையில் சீனா 90 புதிய கிராமங்களை உருவாக்கியுள்ளது. கடந்த காலங்களில் சீனா 628 கிராமங்களில் குடியேற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய எல்லைப் பகுதிகளில் ‘துடிப்பான கிராமங்கள்’ திட்டம் முழுமையாக செயல்படாமல் போயுள்ளது. இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ.4,800 கோடியில் வெறும் ரூ.509 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் 75 கிராமங்கள் மேம்படுத்தப்பட வேண்டியிருந்தும் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
2024 டிசம்பரில், சீனா பிரம்மபுத்திரா நதியில் ‘உலகின் மிகப்பெரிய அணை’யை கட்டுவதாக அறிவித்தது. இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கும், வடகிழக்கு மாநிலங்களின் நீர்வளத்திற்கும், சுற்றுச்சூழலிற்கும் பேரழிவாக அமையும் என்று கார்கே எச்சரித்துள்ளார்.
மேலும், 2021ல் வெளியுறவு அமைச்சகம் சீனாவின் நீர்மின் திட்டங்கள் குறித்து அறிந்திருந்தும், மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் அரசு முழுமையாக மௌனம் சாதித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய நிலையில், பிரதமர் மோடி அரசு அதற்குப் பதிலாக தனது பிரச்சார நடவடிக்கைகளிலேயே கவனம் செலுத்தி வருகிறது. “பிரதமர் மோடியின் முன்னுரிமை இந்தியாவின் பாதுகாப்பல்ல, பொய்யான விளம்பரங்களே!” எனக் கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.