பங்குச் சந்தை மோசடி தொடர்பான வழக்கில் மும்பை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவை எதிர்த்து செபி முன்னாள் தலைவர் மாதவி புரி புச், பிஎஸ்இ நிர்வாக இயக்குநர் சுந்தரராமன் ராமமூர்த்தி உள்ளிட்ட 6 பேர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மும்பை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சசிகாந்த் பங்கர், பங்குச் சந்தை விதிகளை மீறியதற்கான முதல் கட்ட ஆதாரங்கள் தெளிவாக உள்ளன என்று குறிப்பிடினார். இதன் அடிப்படையில், செபி முன்னாள் தலைவர் மற்றும் அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு அமைப்பு (ஏசிபி) வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், 30 நாட்களுக்குள் ஏசிபி விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, செபியின் முன்னாள் தலைவர் மாதவி புரி புச், பிஎஸ்இ நிர்வாக இயக்குநர் சுந்தரராமன் ராமமூர்த்தி, முன்னாள் தலைவர் பிரமோத் அகர்வால், செபியின் தற்போதைய மூன்று முழுநேர இயக்குநர்களான அஸ்வானி பாட்டியா, அனந்த் நாராயண் ஜி, கமலேஷ் சந்திர வர்ஷ்னி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில், செபி அதிகாரிகள் சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மற்ற மூவருக்காக மூத்த வழக்கறிஞர் அமித் தேசாய் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
நீதிபதி எஸ்.ஜி. திகே தலைமையிலான அமர்வு இந்த வழக்கை அவசர விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. நீதிமன்றம் வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரிக்க ஒத்திவைத்து, அதுவரை ஊழல் தடுப்பு பிரிவு (ஏசிபி) எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என உத்தரவிட்டது.