உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு, குஜராத்தின் கிர் தேசிய பூங்காவை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். பாதுகாப்புடன் பயணம் செய்த பிரதமர் மோடி, சிங்கங்களை நேரில் கண்டதுடன், புகைப்படங்கள் எடுத்துத் திரும்பினார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
3 நாட்கள் அரசுமுறை பயணமாக குஜராத்திற்கு சென்றுள்ள மோடி, ஞாயிற்றுக்கிழமை கிா் சோம்நாத் கோயிலில் வழிபாடு செய்தார். அதன் தொடர்ச்சியாக, இன்று கிர் தேசிய பூங்காவிற்கு சென்ற அவர், வனத்துறை அதிகாரிகளுடன் சிங்கங்களை பார்வையிட்டு மகிழ்ந்தார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்,
“உலக வனவிலங்கு தினத்தன்று, நமது பூமியில் உள்ள பல்லுயிரியலைப் பாதுகாக்கும் உறுதியை வலியுறுத்துவோம். ஒவ்வொரு உயிரினமும் முக்கிய பங்கை வகிக்கிறது. எதிர்கால சந்ததியினருக்காக நாம் வனவிலங்குகளைப் பாதுகாக்க வேண்டும். இந்தியாவின் பங்களிப்பை பெருமையாக கருதலாம்.” என தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் வாழும் ஆசிய சிங்கங்களை பாதுகாக்க மத்திய அரசு ₹2,900 கோடி ஒதுக்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஜூனகத் மாவட்டத்தில் 20.24 ஹெக்டேர் பரப்பளவில் “வனவிலங்குகளுக்கான தேசிய பரிந்துரை மையம்” அமைக்கப்படும்.
மேலும், தேசிய வனவிலங்கு வாரியத்தின் (NBWL) 7வது கூட்டத்திற்கும் பிரதமர் தலைமை தாங்க உள்ளார். இதில், ராணுவத் தலைமைத் தளபதி, பல்வேறு மாநிலங்களின் வனத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்த 47 உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிகழ்வுகள், இந்தியாவின் வனவிலங்கு பாதுகாப்பில் தனித்துவமான முன்னேற்றத்தை வெளிப்படுத்துகின்றன.