பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கும் நோக்கில் உள்புகார் குழு (Internal Complaints Committee – ICC) அமைப்பது கட்டாயம். இந்த சட்டத்தின்படி, உரிய நடவடிக்கை எடுக்காத நிறுவனங்களுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பவனர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவலை விளக்கும் வகையில், அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பணிபுரியும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை தடுக்கும் நோக்கில், 2013ஆம் ஆண்டு மத்திய அரசு பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தை (PoSH Act) கொண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் விதிமுறைகளின்படி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்களிலும் உள்புகார் குழு அமைப்பது கட்டாயம். ஒவ்வொரு நிறுவனத்திலும் குறைந்தது ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழு இருக்க வேண்டும். இதில் குழு தலைவராக ஒரு பெண் அலுவலரை நியமிக்க வேண்டும். மேலும், குழுவில் 50 சதவீதம் பெண்கள் இருக்க வேண்டும். மேலும், ஒரு உறுப்பினர் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் குறித்து நிபுணத்துவம் பெற்றவராகவோ, அல்லது சமூக சேவையில் ஈடுபட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும்.
இதுவரை உள்புகார் குழு அமைக்காத நிறுவனங்கள் உடனடியாக குழுவை அமைத்து, அதன் விவரங்களை மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதனை செயல்படுத்தாத நிறுவனங்களுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், அனைத்து நிறுவனங்களும் இந்த சட்டத்தின்படி செயல்பட வேண்டும் என்றும் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
மேலும், உள்புகார் குழுவை அமைத்துள்ள நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத இறுதிக்குள், அந்நிறுவனத்தின் ஆண்டறிக்கையை மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், சட்டத்தை முழுமையாக கடைபிடிக்கவும், நிறுவனங்கள் இதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.