சென்னை: பானிபூரி மற்றும் தெருவோர உணவகங்கள் மருத்துவ சான்றிதழ் மற்றும் பதிவு உரிமம் பெற வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.
உணவு பாதுகாப்பு துறை சார்பில், தெருவோர உணவக உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாம் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் நேற்று நடந்தது. இதில் 627 தெரு உணவு வியாபாரிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தோல் தொடர்பான பிரச்னைகள் உள்ளதா என மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்து, பதிவு உரிமம் மற்றும் புதுப்பித்தல் சான்றிதழ்களை வழங்கினர்.
இதுகுறித்து, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் கூறுகையில், ”சென்னை முழுவதும் மண்டல வாரியாக முகாம் நடத்தப்படும். குறிப்பாக, பானிபூரி விற்பனையாளர்களுக்கு சுகாதாரமான முறையில் விற்பனை செய்வது மற்றும் பதிவு உரிமம் பெறுவது மற்றும் மருத்துவ பரிசோதனை செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்படும். இதற்கான சிறப்பு முகாம் விரைவில் செயல்படுத்தப்படும்,” என்றார்.