புதுடெல்லி: 85 நாடுகளுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி 10 ஆண்டுகளில் 30 மடங்கு அதிகரித்துள்ளதாக இந்திய பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருப்பதாவது: கடந்த 2013-14ம் ஆண்டில் இந்தியாவின் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி ரூ.686 கோடியாக இருந்தது. தற்போது 2023-24 நிதியாண்டில் ரூ.21,083 ஆக அதிகரித்துள்ளது. இது 30 மடங்கு அதிகமாகும்.
நாட்டின் பாதுகாப்புத் துறை அதன் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திறனை நிரூபித்துள்ளது. இதன் காரணமாக தென்கிழக்காசியா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட 85க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்கின்றன.
ஏவுகணைகள், ரேடார்கள், கடற்படை அமைப்புகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் கண்காணிப்பு உபகரணங்கள் ஆகியவை ஏற்றுமதியில் இடம்பெறும் முக்கிய உபகரணங்களாகும். பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுடன் இணைந்து உருவாக்கிய பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை சமீபத்தில் வாங்கியது மற்றொரு பெரிய சாதனை.
ஏற்றுமதி சந்தையை வழங்குவதில் கடற்படை அமைப்புகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் போன்ற மேம்பட்ட தளங்கள் இந்த பிரிவில் சாதனையை எடுத்துக்காட்டுகின்றன. 2023-24 ஆம் ஆண்டில் மொத்த உற்பத்தி மதிப்பில், சுமார் 79.2 சதவிகிதம் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களாலும், 20.8 சதவிகிதம் தனியார் துறையினராலும் பங்களிக்கப்படுகிறது.
லார்சன் & டூப்ரோ, டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் மற்றும் பாரத் ஃபோர்ஜ் போன்ற நிறுவனங்கள் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும் தனியார் துறையில் முக்கியமானவை. கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. ஏற்றுமதி நடைமுறைகளை எளிமையாக்குவதும், ‘மேக் இன் இந்தியா’ போன்ற அரசால் எடுக்கப்பட்ட பல கொள்கை முயற்சிகளும் ஏற்றுமதி அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.