சென்னை: தாம்பரம் பணிமனையில் சிக்னல் மேம்பாட்டு பணி காரணமாக, தாம்பரம் – நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அந்த்யோதயா விரைவு ரயில் ரத்து செய்யப்பட உள்ளது. இதுதவிர, 26 விரைவு ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளன.
தாம்பரம் பணிமனையில் சிக்னல் மேம்பாட்டு பணி உள்பட பல்வேறு பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன்காரணமாக, பல்வேறு விரைவு ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு: முழுமையாக ரத்து: தாம்பரம் – நாகர்கோவிலுக்கு ஜூலை 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை இரவு 11 மணிக்கு புறப்படும் அந்த்யோதயா அதிவிரைவு ரயில் (20691), நாகர்கோவில் – தாம்பரத்துக்கு ஜூலை 22-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை இயக்கப்படும் அந்த்யோதயா விரைவு ரயில் (20692) ஆகிய 2 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. பகுதி ரத்து: சென்னை எழும்பூர் – மதுரைக்கு ஜூலை 23-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை தினசரி புறப்பட வேண்டிய வைகை விரைவு ரயில் (12635), எழும்பூர் – செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் செங்கல்பட்டில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்படும்.
சென்னை எழும்பூர் – திருச்சிக்கு ஜூலை 23-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை இரவு 11.35 மணிக்கு புறப்பட வேண்டிய மலைக்கோட்டை விரைவு ரயில் (12653), பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் செங்கல்பட்டில் இருந்து ஜூலை 24-ம் தேதி முதல் ஆக.1-ம் தேதி வரை அதிகாலை 12.40 மணிக்கு புறப்படும். ஐதராபாத் – தாம்பரத்துக்கு ஜூலை 22, 23, 24, 25, 26, 27, 29, 30, 31 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் அதிவிரைவு ரயில் (12760), சென்னை கடற்கரை நிலையத்தில் நிறுத்தப்படும்.
தாம்பரம் – ஐதராபாத்துக்கு ஜூலை 23, 24, 25, 26, 27, 28, 30, 31 ஆகிய தேதிகளில் மாலை 5.30 மணிக்குபுறப்பட வேண்டிய சார்மினார் விரைவு ரயில் (12759) பகுதி ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்படும்.
தாம்பரம் – செங்கோட்டைக்கு ஜூலை 24, 25, 28, 30 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் (20683), தாம்பரம் – விழுப்புரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் விழுப்புரத்தில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும். செங்கோட்டை – தாம்பரத்துக்கு ஜூலை 22, 24, 27, 29, 31 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய விரைவு ரயில் (20684), விழுப்புரம் – தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படும். எனவே, இந்த ரயில் விழுப்புரத்தில் நிறுத்தப்படும்.
காரைக்குடி – சென்னை எழும்பூருக்கு ஜூலை 23-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை தினசரி காலை 5.35 மணிக்கு புறப்படும் பல்லவன் அதிவிரைவு ரயில் (12606), செங்கல்பட்டு – சென்னை எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்படும். எனவே, இந்த ரயில் செங்கல்பட்டு நிலையத்தில் நிறுத்தப்படும்.
தாம்பரம் – நாகர்கோவிலுக்கு ஜூலை 24, 28, 29, 31 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு புறப்பட வேண்டிய அதிவிரைவு ரயில் (22657), சென்னை எழும்பூரில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும். நாகர்கோவில் – தாம்பரத்துக்கு ஜூலை 22, 23, 25 29, 30 ஆகிய தேதிகளில் மாலை 4.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் (22658), தாம்பரத்துக்கு பதிலாக சென்னை எழும்பூரை அதிகாலை 4.35 மணிக்கு வந்தடையும். இவை தவிர, 11 ரயில்களின் சேவைகள் மாற்றப்பட்டுள்ளன. மேலும், 9 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளன. இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.