துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, ராம்கி மற்றும் பலர் நடித்துள்ள படம் லக்கி பாஸ்கர். வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. தெலுங்கில் உருவாகியுள்ள இப்படம் வரும் 31-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் குறித்து துல்கர் சல்மான் பேசுகையில், “இந்தப் படத்தில் வரும் பாஸ்கர் கதாபாத்திரம் அனைவரையும் கனெக்ட் செய்கிறது. இந்த வருடம் ஒன்றிரண்டு படங்களில் நடிக்கவிருந்தேன். ஒன்று நீக்கப்பட்டது. மற்றொன்று கடைசி நேரத்தில் நடக்கவில்லை.
இடையில் நான் நோய்வாய்ப்பட்டேன். இதனால் இந்த படம் சற்று தாமதமானது. படத்துக்காக பிரமாண்ட செட் போட்டிருந்தார்கள். அதனால் உடம்பு சரியில்லை என்றாலும் எப்படியாவது நடித்துவிடுவேன் என்றேன். ஆனால் தயாரிப்பாளரும் இயக்குனரும் வேண்டாம் என்று கூறி ஆதரவாக இருந்தனர். நான் நடிகர் ராம்கி சாரின் தீவிர ரசிகன்.
படத்தில் அவரது கதாபாத்திரம் மிக முக்கியமானது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழுக்கு வந்திருக்கிறேன் என்பதால் இந்த படம் மனசுக்கு நெருக்கமாக உள்ளது என்றார்.