மும்பை: ஐபிஎல் 2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இதற்கு முக்கியக் காரணமாக அந்த அணியின் தொடக்க வீரர்கள் இருக்கின்றனர். விராட் கோலி ஆங்கர் ரோலில் நிலைத்து விளையாடும் நிலையில், இங்கிலாந்து வீரர் பில் சால்ட் தொடக்கத்தில் அதிரடியாக ஆடுவதால் ஆர்சிபி அணிக்கு தொடர்ந்து நல்ல தொடக்கம் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் ஆர்சிபி அணி நடத்திய நேர்காணல் நிகழ்ச்சியில் பில் சால்ட் பங்கேற்றார். தொகுப்பாளர் அவரிடம், “நீங்கள் ஒருகாலத்தில் ஐபிஎல் தொடரில் நட்புக்கு இடம் இல்லை என்று கூறியதில்லை. ஆனால் இப்போது விராட் கோலியுடன் இணைந்து விளையாடுகிறீர்களே, அவர் உங்கள் நண்பரா?” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு முதலில் பில் சால்ட், “நண்பர்கள் கிடையாது, அவர் என் கூட்டாளி” என்று பதிலளித்தார். இந்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த அவர், உடனே திருத்தி, “நான் யாருடன் கிரிக்கெட் விளையாடுகிறேனோ, அவர்கள் எல்லாம் என் நண்பர்களே. சர்ச்சையில் சிக்க விரும்பவில்லை” என்று விளக்கமளித்தார்.
ஆனால் தொகுப்பாளர் மீண்டும், “அப்போ கோலியுடன் நண்பராக இல்லையா?” என கேட்டதற்கு சால்ட் சிறிது நகைச்சுவையுடன் “கொலிக்ஸ்” என பதிலளித்தார். அவரது இந்த பதில் ரசிகர்களிடம் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. கோலி போன்ற ஜாம்பவான் வீரருடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்தும், அதைக் கொண்டாடாமல் திமிராக நடந்துகொள்வதாக சிலர் விமர்சனம் செய்துள்ளனர்.
தற்போது புள்ளிப் பட்டியலில் ஆர்சிபி அணி 10 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளைக் கொண்டு முதல் இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள சிஎஸ்கே, லக்னோ மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுடன் நடைபெறும் போட்டிகளில், ஒன்று அல்லது இரண்டு வெற்றிகள் பெற்றாலே பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகும்.
பில் சால்ட் மற்றும் கோலியின் நட்பு விவகாரம் விலகியே, அவர்களின் ஓப்பனிங் கூட்டணியால் ஆர்சிபி அணிக்கு தொடரில் தொடர்ந்து வெற்றி கிடைத்து வருகிறது என்பது தான் முக்கியமானது.