மஹேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 8 போட்டிகளில் 6 தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசியில் இருக்கிறது. இந்த நிலையில், சிஎஸ்கே மற்றும் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான 43-வது லீக் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில், தோனி 400வது டி20 போட்டியில் விளையாடப் போவதன் மூலம் ஒரு புதிய சாதனை நிகழ்த்தப் போகிறார்.

தோனி தற்போது 399 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார், மேலும் இன்றைய போட்டி மூலம் 400வது டி20 போட்டி விளையாடுகிறார். இந்திய அளவில் மூன்று வீரர்களே 400 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளனர். அந்த பட்டியலில் ரோகித் சர்மா 456 டி20 போட்டிகளில் விளையாடி முதல் இடத்தில் உள்ளார். அதைத் தொடர்ந்து, தினேஷ் கார்த்திக் 412 போட்டிகளில் விளையாடி இரண்டாவது இடத்தில், விராட் கோலி 407 போட்டிகளில் விளையாடி மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
தோனி, இன்றைய போட்டியில் 400வது டி20 போட்டி விளையாடி, இந்த பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடிக்கப் போகிறார். இதுவரை 399 போட்டிகளில் விளையாடிய அவர் 38 ரன்கள் சராசரியுடன் 7556 ரன்களை குவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக 84 ரன்களும், 28 அரை சதங்களும் அடித்துள்ளார். மேலும், விக்கெட் கீப்பிங்கில் 318 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
உலகளவில் அதிக டி20 போட்டிகளில் விளையாடிய வீரர் ஆக பொல்லார்டு 695 போட்டிகளுடன் முதலிடத்தில், டுவைன் பிராவோ 582 போட்டிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.