இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய விராட் கோலி, சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2011 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் அரங்கில் அறிமுகமான அவர், ஆரம்ப காலங்களில் நிலைத்தாடலில் சிரமப்பட்டாலும், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் முழுமையான ஆதரவைப் பெற்றதால் குறுகிய காலத்திலேயே இந்திய அணியின் முக்கியமான பேட்ஸ்மேனாக மாறினார்.

2013இல் சச்சின் டெண்டுல்கர் ஓய்வுக்கு பிறகு, இந்திய பேட்டிங் ஆணியின் முதுகெலும்பாக வளர்ந்தவர் கோலி. தொடர் தோல்விகளிலும் சீரான ரன் குவிப்பு, கடினமான சூழ்நிலைகளிலும் வீரரான அவருக்கு உலகளவில் பாராட்டுகள் குவிந்தன. 50க்கும் மேற்பட்ட சராசரியுடன் டெஸ்ட் ரன்கள் குவித்த அவர், உலகின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்பட்டார்.
எனினும், கடந்த சில வருடங்களில் அவரது ஆட்டநிலை வீழ்ச்சியடைந்தது. குறிப்பாக, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் முதல் போட்டியில் சதம் விளாசியவர், அதன்பின்னர் தொடர்ச்சியாக அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக அவரது சராசரி 46.85 ஆக குறைந்தது. இதே தொடரில் இந்தியா எதிர்பார்க்காத தோல்வியை சந்தித்ததற்கும் அவரது குறைபாடான பேட்டிங் ஒரு காரணமாக மாறியது.
பின்னர் நடைபெறவிருந்த இங்கிலாந்து தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் ஓய்வை அறிவித்தார். இதனால், 10,000 ரன்கள் என்ற சாதனைக்குச் செல்வதற்கான வாய்ப்பை அவர் இழந்தார். தனது டெஸ்ட் பயணத்தை 46.85 என்ற சராசரியுடன் முடித்த கோலி, புள்ளிவிவர ரீதியில் ஒரு “சராசரி” பேட்ஸ்மேனாகவே பாவிக்கப்படுகிறார் என்ற விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், “பேட்டிங் சராசரி குறைந்தாலும், விராட் கோலி நிச்சயம் ஆல் டைம் கிரேட் டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் பட்டியலில் இடம் பெறுவார்,” என ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். ஐசிசி இணையதளத்துக்கு வழங்கிய நேர்காணலில் அவர், “அவருடைய சராசரி கடந்த சில ஆண்டுகளில் குறைந்திருந்தாலும், பெரும்பாலான ஆண்டுகளில் அவர் 50க்கும் மேற்பட்ட சராசரியுடன் விளையாடியவர். அவர் 30 சதங்கள் அடித்திருப்பார் என நினைக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்திய பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு நிலைகளில் சிக்கல் அடைவது இயல்பான விஷயம் என்றும் அவர் விளக்கினார். விராட் கோலி ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையில் அவரது ஃபிட்னஸ், கேப்டன்ஷிப், அணுகுமுறை மற்றும் ஆளுமை ஆகிய அம்சங்கள் எப்போதும் பேசப்படும் என்றும் பாண்டிங் கூறினார்.
அதனால், சராசரி எவ்வளவாக இருந்தாலும், இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் தாக்கம் நீண்ட நாள் வரை அழியாததாக இருக்கும் என்பது உறுதி.