ஜெய்ப்பூர்: ஒரு காரின் எடை 3 கிலோ என்றால் நம்ப முடிகிறதா. அதேபோல் ஒரு காரில் 50 பேர் பயணிக்க முடியும். இதையெல்லாம் சாத்தியமாக்கியிருப்பது ராஜஸ்தான் போக்குவரத்து துறை.
ராஜஸ்தான் மாநிலத்தில், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஏப்ரல் 2016 முதல் மார்ச் 2021 வரை மாநிலப் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை சிஏஜி எனப்படும் ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் ஆய்வு செய்தது. நாடு முழுவதும் போக்குவரத்து அலுவலகங்களின் பணிகள் கணினிமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாகனம் தொடர்பான தகவல்களை ‘வாகன்’ தளத்திலும், உரிமம் தொடர்பான தகவல்களை ‘டிரைவர்’ தளத்தில் பார்க்கலாம். இதற்கான ஆப்களும் உள்ளன. இதன்படி நாடு முழுவதும் 18 கோடி வாகனப் பதிவுகள் மற்றும் 8 கோடி உரிமங்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
ராஜஸ்தானில் இதுபோன்ற வாகனப் பதிவு மற்றும் உரிமம் தொடர்பான தகவல்களை சிஏஜி ஆய்வு செய்தது. அதிகாரிகளே திகிலடையும் வகையில் இதில் பெரும் குழப்பம் நிலவுகிறது. அதன் விவரம்: இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் குறித்து, 1–0.14 லட்சம் பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 15,570 வாகனங்கள் 0-3 கிலோ எடை கொண்டவை. கொள்முதல் தேதிக்கு முன், 119 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டன.
இதில் 14 வாகனங்கள் தலா 1 லட்சம் கிலோவுக்கு மேல் எடை கொண்டவை. மேலும், 712 வாகனங்கள் போலி என்ஜின் எண் மற்றும் சேஸ் எண் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 18 வயதுக்குட்பட்ட 166 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம், 1,219 வாகனங்களில் இருக்கை அளவுகள் தவறாகக் காட்டப்பட்டுள்ளன. 120 சரக்கு வாகனங்கள் 10 – 100 பயணிகள் இருக்கைகளுடன் காட்டப்பட்டுள்ளன.
10 – 50 பயணிகள் அமரும் வகையில் ஏழு கார்கள் காட்டப்பட்டுள்ளன. மேலும், 1,018 பஸ் போன்ற பயணிகள் வாகனங்கள் 2 அல்லது 3 இருக்கைகள் கொண்டதாக காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், சிஏஜி அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த தவறுகள் கடந்த ஆண்டு டிசம்பரில் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால், அவை திருத்தப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.