நாக்பூர்: பான் மசாலாவை சாலையில் துப்புபவர்களை புகைப்படம் எடுத்து செய்தித்தாள்களில் வெளியிட வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற தூய்மை இந்தியா திட்டத்தில் மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார்.
அப்போது, நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் சாக்லேட் சாப்பிடுபவர்கள் ரேப்பரை உடனே தூக்கி எறிந்து விடுகிறார்கள்.
ஆனால் வெளி நாடுகளில் சாக்லேட்டை சாப்பிட்டுவிட்டு, கவரைக் கழற்றாமல் பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறார்கள். நான் காரில் சாக்லேட் சாப்பிட்டு ரேப்பரை தூக்கி எறிந்தேன். ஆனால், தற்போது அது இல்லை. நான் சாக்லேட் சாப்பிட்டால், வீட்டிற்குச் சென்று ரேப்பரை குப்பையில் வீசுவேன்.
பொது இடங்களில் பான் மசாலாவை வைத்து, எச்சில் துப்புபவர்களை கண்டுபிடித்து, புகைப்படம் எடுத்து செய்தித்தாளில் வெளியிட்டால், அசுத்தம் செய்பவர்கள் யார் என்பது பொதுமக்களுக்கு தெரியும். இதைத்தான் மகாத்மா காந்தி செய்தார் என்றார்.