பாட்னா: பீகார் சட்டசபையில் சீட் இடஒதுக்கீடு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மீது கடும் கோபத்தில் இருந்த முதல்வர் நிதிஷ்குமார், ”நீங்கள் ஒரு பெண். உங்களுக்கு எதுவுமே தெரியாது” என்று ராஷ்ட்ரிய ஜனதா தள பெண் எம்எல்ஏ ரேகா பாஸ்வான் கடுமையாக சாடியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பீகாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க, கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது.
சபை நேற்று கூடியதும், முதல்வர் நிதிஷ்குமார் பேச எழுந்தார். அப்போது, இடஒதுக்கீடு, சிறப்பு அந்தஸ்து போன்ற பிரச்னைகள் குறித்து, ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், எம்எல்ஏக்கள் கோஷங்கள் எழுப்பினர்.
எதிர்க்கட்சிகள் தலையிட்டு பேசவிடாமல் தடுத்ததால், முதல்வர் நிதிஷ்குமார் கடும் கோபமடைந்தார். அப்போது ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் பெண் எம்எல்ஏ ரேகா பாஸ்வான் எழுந்து கேள்வி கேட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலளித்து முதல்வர் நிதிஷ்குமார் கூறியதாவது:
எனது அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக நிறைய செய்துள்ளது. அதனால் தான், இன்று உங்களால் இவ்வளவு பேச முடிகிறது. நீ ஒரு பெண். உனக்கு எதுவும் தெரியாது. நீங்களோ அல்லது உங்கள் தரப்போ பெண்களுக்கு எதுவுமே செய்யவில்லை. ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு பாட்னா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளோம். நல்ல முடிவுகளை எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் ஆவேசமாக பேசினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கடும் நடவடிக்கையில் ஈடுபட்டதால், சபையில் கூச்சல், குழப்பம் அதிகரித்தது. இது குறித்து ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ‘‘மகளிருக்கு எதிராக மலிவான, நாகரீகமற்ற, கீழ்த்தரமான கருத்துக்களை கூறுவது முதல்வர் நிதிஷ்குமாருக்கு வாடிக்கையாகி விட்டது என்றார்.