புதுடெல்லி: தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அனைத்து மருத்துவர்களுக்கும் ஆதார் போன்ற தனித்துவமான எண் அடிப்படையிலான அடையாள அட்டையுடன் பதிவு செய்யத் தொடங்கியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தேசிய மருத்துவப் பதிவேடு (என்எம்ஆர்) போர்ட்டலை ஆகஸ்ட் 23-ம் தேதி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “தேசிய சுகாதாரப் பதிவேடு திட்டம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திட்டங்களில் ஒன்றாகும்.
இது டிஜிட்டல் ஹெல்த்கேர் சூழலை வலுப்படுத்தும் மற்றும் இந்திய மக்களுக்கு தரமான சுகாதாரத்தை உறுதி செய்யும்,” என்றார்.
இந்நிலையில், அனைத்து மருத்துவர்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கு பிரத்யேக எண் கொண்ட அடையாள அட்டை வழங்கும் பணியை என்எம்சி தொடங்கியுள்ளது.
இந்த இணையதளத்தில் பதிவு செய்யும் செயல்முறையை மருத்துவர்கள் தொடங்குவதற்கு, அவர்களின் ஆதார், எம்பிபிஎஸ் பட்டத்தின் டிஜிட்டல் நகல் மற்றும் மாநில மருத்துவ கவுன்சில், இந்திய மருத்துவக் கவுன்சிலின் பதிவுச் சான்றிதழ் ஆகியவை கட்டாயமாகும்.
மேலும், தகுதிச் சான்றுகள் இருந்தால் கூடுதல் விவரங்களை போர்ட்டலில் உள்ளிடலாம். இதற்குப் பிறகு, விண்ணப்பம் தானாகவே மாநில மருத்துவ கவுன்சிலுக்கு (எஸ்எம்சி) சரிபார்ப்புக்காகச் செல்லும். எஸ்எம்சி பின்னர் விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட கல்லூரி அல்லது நிறுவனத்திற்கு மேலதிக ஆய்வுக்காக அனுப்பும். வெற்றிகரமான சரிபார்ப்புக்குப் பிறகு விண்ணப்பம் என்எம்சிக்கு திருப்பி அனுப்பப்படும்.
என்எம்சி மீண்டும் ஒருமுறை அனைத்து விவரங்களையும் சரிபார்த்த பிறகு மருத்துவருக்கு ஒரு தனிப்பட்ட என்எம்ஆர் ஐடி வழங்கப்படும். இந்த போர்டல் மூலம், எஸ்எம்சி மற்றும் கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து மருத்துவ அமைப்புகளும் ஒரே தளத்தில் உள்நுழைந்து விண்ணப்பங்களை சரிபார்க்க முடியும்.
இந்திய மருத்துவப் பதிவேட்டில் (ஐஎம்ஆர்) பதிவு செய்யப்பட்ட அனைத்து MBPS மருத்துவர்களும் என்எம்ஆர் உடன் மீண்டும் பதிவு செய்யுமாறு என்எம்சி சமீபத்தில் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.