டெல்லி: வியட்நாமில் இருந்து இந்தியாவுக்கு செல்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியை மாற்ற சாம்சங் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்க நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறிய டிரம்ப், பரஸ்பர வரி விதித்து உலகையே அதிர வைத்துள்ளார்.

தற்போது இந்த வரி 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பரஸ்பர வரிகள் நிறுத்தப்பட்டுள்ள நாடுகளுக்கு அடிப்படை வரி 10 சதவீதமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வியட்நாமில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 46 சதவீத வரி விதித்துள்ள நிலையில், சாம்சங் தனது உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. இந்தியா மீது அமெரிக்கா 10% வரி மட்டுமே விதித்துள்ளதால், இங்குள்ள தனது தொழிற்சாலைகளில் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் நொய்டா மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. சாம்சங் நொய்டாவில் மொபைல் போன்களையும், ஸ்ரீபெரும்புதூரில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களையும் தயாரிக்கிறது. வியட்நாமில் உள்ள தொழிற்சாலை சாம்சங்கின் மிகப்பெரிய மொபைல் போன் உற்பத்தி மையமாகும். சாம்சங் 2024-ல் ரூ.4.42 லட்சம் கோடி மதிப்புள்ள மொபைல் போன்கள் மற்றும் உதிரி பாகங்களை ஏற்றுமதி செய்தது.