புதுடெல்லி: 500 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தீபாவளி ராமருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த தீபாவளியாக இருக்கப்போகிறது என பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நேற்று அவர் மேலும் கூறியதாவது:-
தந்திராஸ் விழாவை கொண்டாடும் அனைத்து குடிமக்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். தீபாவளி பண்டிகை கொண்டாட இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இந்த தீபாவளி ராமருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. 500 ஆண்டுகளுக்குப் பிறகு ராமர் அயோத்தியில் வசிக்கிறார். அங்கிருந்து முதல் முறையாக இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளார்.
எனவே, இந்த தீபாவளி பண்டிகை நம் அனைவருக்கும் பிரமாண்டமாகவும் சிறப்பானதாகவும் இருக்கும். இதைப் பார்க்கும் நாம் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக நீண்ட நாட்களாக நீடித்து வந்த பிரச்சனை 2019-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்தது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அதே நேரத்தில், அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு பெரிய நிலத்தை ஒதுக்குமாறு உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. அயோத்தி ராமர் கோவிலுக்கு இது முதல் தீபாவளி பண்டிகை.