கோரக்பூர்: உத்தரபிரதேசத்தில் தெருநாய் ஒன்று 1 மணி நேரத்தில் குழந்தைகள் உட்பட 27 பேரை கடித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் தெருநாய் கடியால் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளி செல்லும் குழந்தைகளை தெருநாய்கள் கடித்து பலியாக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் கடந்த 14ம் தேதி ஒரு மணி நேரத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 27 பேரை தெருநாய் கடித்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடி கேமராவில் பதிவாகி உள்ளது. கோரக்பூர், ஷாபூரின் ஆவாஸ் விகாஸ் காலனியை சேர்ந்த ஆஷிஷ் யாதவ் (22) என்பவர் கடந்த 14ம் தேதி இரவு 9.45 மணியளவில் தனது வீட்டின் முன் நடந்து சென்று கொண்டிருந்த போது செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு தெருநாய் அவரை நோக்கி ஓடி வந்து தாக்குகிறது. விரட்ட முயன்றபோதும் நாய் கடித்தது. இதனால் நிலை தடுமாறி சரமாரியாக கடிபட்டு கீழே விழுந்தார். இதனால், அவரது கால், வாய், கண் ஆகியவற்றில் இருந்து ரத்தம் வழிந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதையடுத்து, வீட்டின் முன் நின்று கொண்டிருந்த பெண்ணின் காலை நாய் கடித்துள்ளது. இதனால், பலத்த காயமடைந்த அவரது காலுக்கு தையல் போடப்பட்டது. இதையடுத்து வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகளை நாய் தாக்கியது. விஜய் யாதவ் கூறுகையில், “நாய் கடித்ததில் பலத்த காயம் அடைந்த எனது மகன் ஆஷிஷ் யாதவை கோரக்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் அங்கு ரேபிஸ் தடுப்பூசி இல்லை என்று கூறினர்,” என்று அவர் கூறினார்.
தெருநாய்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நாய்களுக்கு கருத்தடை செய்தல்: கோரக்பூர் நகராட்சி கூடுதல் கமிஷனர் துர்கேஷ் மிஸ்ரா கூறுகையில், ”தெரு நாய்கள் கடித்தால் எந்த புகாரும் இல்லை. அதே சமயம் தெருநாய்களுக்கு அவ்வப்போது கருத்தடை செய்து வருகிறோம். வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போட விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம்,” என்றார்.