உண்மையில் மாமியார் – மருமகள் உறவுகளை நிர்வகிப்பது சவாலானது. நீங்கள் திருமணம் செய்து கொண்டிருக்கும் பெண் என்றால் உங்கள் மாமியாரிடம் கூறுவதை தவிர்க்க வேண்டிய சில விஷயங்களை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் உங்கள் மாமியாரிடம் பேசும் போது வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது இருவருக்குமான உறவை இணக்கமாக பேணுவதற்கு உதவும்.
நீங்கள் என் உண்மையான அம்மா இல்லை…
உங்களுக்கும், உங்கள் மாமியாருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விரக்தி ஏற்படும் சந்தர்ப்பங்களில் கூட, ‘நீங்கள் ஒன்றும் என் அம்மா இல்லை’ என்று நீங்கள் கோபமாக அல்லது வெறுப்பாக சொல்வது அவர்களது மனதை புண்படுத்தும். எனவே இந்த வார்த்தையை மாமியாரிடம் சொல்வதை தவிர்த்து விடுங்கள். உண்மையில் உங்கள் மீதான அக்கறை அல்லது கவனித்து கொள்ளும் நோக்கத்தில் ஏதேனும் அவர்கள் சொல்லும் போது நீங்கள் இந்த வார்த்தையை பயன்படுத்துவது உங்கள் பந்தத்தை வளர்க்க அவர்கள் எடுக்கும் முயற்சியை தோல்வியுற செய்யும்.
எங்கள் குடும்பத்தில் நாங்கள் இதை இப்படி தான் செய்வோம்…
உங்கள் கணவர் வீட்டில் பின்பற்றப்பட்டு வரும் மரபுகள் அல்லது நடைமுறைகளை உங்கள் மாமியார் உங்களிடம் எடுத்து சொன்ன பிறகும் கூட, இல்லை நாங்கள் இந்த விஷயத்தை எங்கள் வீட்டில் இப்படி தான் செய்வோம் என்று கூறி மாமியாரின் வார்த்தைகளை நிராகரிப்பது அவரை அவமதிப்பது போலாகிவிடும். இப்படி சொல்வதற்கு பதில் உங்கள் குடும்பம் மற்றும் கணவர் வீட்டு மரபுகள் என இரண்டும் சேர்ந்த சமரச விஷயங்களை முன்னெடுக்க முயற்சி செய்யுங்கள்.
நீங்கள் உங்கள் பிள்ளையை வளர்த்த விதம் எனக்கு பிடிக்கவில்லை…
உங்கள் கணவரை வளர்த்துள்ள விதம் பற்றி விமர்சிப்பது அவர் மீதான தனிப்பட்ட தாக்குதலாக உங்கள் மாமியார் உணரலாம். வளர்ப்பு குறித்து உங்களுக்கு ஏதேனும் கவலைகள் இருந்தால் உரிய முறையில் உங்கள் மாமியாரிடம் உங்கள் வேதனையை வெளிப்படுத்தி அடுத்து என்ன செய்யலாம் என்று அவரிடமே ஆலோசனை கேட்கலாம்.
நீங்கள் ஏன் எங்கள் வாழ்வில் குறுக்கிடுகிறீர்கள், விலகி இருக்க கூடாதா.!!
உங்கள் மாமியாருடனான உறவுக்கு ஒரு குறிப்பிட்ட எல்லைகளை அமைப்பது முக்கியம் தான் என்றாலும், அதற்காக அவரை விலகி இருக்க சொல்வது உங்கள் இருவருக்குமான உறவை நிரந்தரமாக சேதப்படுத்த கூடும். மாறாக உங்கள் வாழ்க்கையில் அவரது பங்கு இருக்க வேண்டும் அதே சமயம் அவரிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை நாகரீகமாக வெளிப்படுத்துங்கள்.
நீங்கள் உங்கள் எல்லைகளை மீறுகிறீர்கள்…
உங்கள் லிமிட்டை நீங்கள் தாண்டுகிறீர்கள் என உங்கள் மாமியாரை குற்றம் சாட்டுவது கடுமையானதாக இருக்கலாம். இப்படி கடும் வார்த்தையை பயன்படுத்துவதற்கு பதிலாக, அவர் மீது உங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்புகள் மற்றும் அவருக்கான எல்லைகளை பற்றி நிதானமாக விவாதித்து நல்ல முடிவெடுப்பது உறவை சீராக வைக்கும்.
நீங்கள் எங்களுக்குக் கொடுக்கும் பரிசுகள் எனக்கு பிடிக்கவில்லை…
குறிப்பாக அன்புடன் கொடுக்கப்படும் பரிசுகளை விமர்சிப்பது யாரையாக இருந்தாலும் புண்படுத்தும். அவர்கள் கொடுக்கும் பரிசுகளை பற்றி நீங்கள் விவாதிக்க வேண்டும் என்றால், அதை அவரது மனம் புண்படாமல் செய்யுங்கள். உங்கள் மாமியார் கட்டுப்பாட்டில் நீங்கள் இருப்பதாக உணருவது உண்மையில் வெறுப்பாக இருக்கலாம், ஆனால் இந்தக் குற்றச்சாட்டை நேரடியாகக் கூறுவது உறவில் விரிசலை அதிகரிக்கும். எனவே உங்கள் தேவைகளை சார்ந்து உங்கள் மாமியாரிடம் அமைதியாக பேசுங்கள். உங்களுக்கு இருக்கும் கவலை மற்றும் பிரச்சனைகளை தீர்ப்பதில் அவருக்கு அக்கறை ஏற்படுத்தும் வழிகளை ஆராயுங்கள்.