சர்க்கரை நோயாளிகளுக்கோ, இதைத் தடுக்க விரும்புவோருக்கோ HbA1c என்ற ரத்த பரிசோதனை மிகவும் முக்கியமானது. இது கடந்த மூன்று மாதங்களில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் சராசரி அளவைத் துல்லியமாகக் காட்டுகிறது. இந்த பரிசோதனை மூலம் தான் சர்க்கரை நோயின் இருப்பை உறுதி செய்வதோடு, அதன் கட்டுப்பாடும் புரிகிறது. நீரிழிவு நோயால் ஏற்படும் இதய நோய், சிறுநீரகக் கோளாறு, நரம்பியல் பாதிப்பு போன்றவை மிக அபாயகரமானவை. இதை தடுப்பதற்கு HbA1c அளவை கண்காணித்து வைத்திருக்க வேண்டும்.

இதை இயற்கையாக குறைக்கும் வழிகளில் முக்கியமானது உணவுக் கட்டுப்பாடு. அதிக நார்சத்து கொண்ட காய்கறிகள், முழுத் தானியங்கள், புரதச்சத்து நிறைந்த உணவுகள் HbA1c அளவை உயராமல் கட்டுப்படுத்த உதவுகின்றன. பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகள் மற்றும் குளிர்பானங்களை தவிர்ப்பது அவசியம்.
உணவோடு சேர்ந்து உடற்பயிற்சி செய்யும் பழக்கமும் மிகவும் அவசியம். தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டம் போன்ற உடற்பயிற்சி மேற்கொள்வது பலனளிக்கும். உணவு சாப்பிட்ட பின் சற்றே நடப்பதாலும் கூட இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த முடியும்.
மன அழுத்தம் அதிகரிப்பதும், கார்டிசோல் ஹார்மோனின் காரணமாக இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும். அதனைத் தவிர்க்க யோகா, தியானம், ஆழமான மூச்சுப் பயிற்சி போன்ற செயல்கள் மிகுந்த பயனளிக்கும். தூக்கமும் முக்கியம். தினமும் 7 முதல் 8 மணி நேரம் பரிபூரணமாக தூங்கும்போது ஹார்மோன் சமநிலையை சீராக்கி இன்சுலின் செயல்பாடுகள் நன்றாக இயங்கும்.
இவற்றோடு வெந்தயம், நெல்லிக்காய், பட்டை ஆகிய இயற்கை பொருட்களும் HbA1c அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. மேலே கூறிய வாழ்க்கைமுறைகளை பின்பற்றுவதால் உங்கள் HbA1c அளவை இயற்கையாகவும், சீராகவும் வைத்திருக்க முடியும். எதையும் முயற்சிப்பதற்கு முன் உங்கள் மருத்துவரின் ஆலோசனை தவிர்க்க முடியாத ஒன்று.