விழுப்புரம்: வடகிழக்கு பருவமழையால் கனமழை பெய்து வருவதால், தவெக மாநாட்டின் வாகன நிறுத்துமிடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் வாகனங்களை சிரமமின்றி நிறுத்த மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்பது உள்பட மேலும் 5 கேள்விகளை போலீசார் தரப்பில் எழுப்பியுள்ளனர்.
விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை வரும் 27-ம் தேதி நடிகர் விஜய் கட்சியின் தவெக மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டிற்காக, பந்தல் கால் நடப்பட்டு, மாநாட்டு இடத்தை சமன்படுத்துதல், அப்பகுதியில் உள்ள 6 கிணறுகளுக்கு இரும்பு வேலி அமைத்தல், மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதனிடையே மாநாட்டு பந்தலுக்கு இரும்பு குழாய்கள் ஏற்றிச் சென்ற லாரி மாநாட்டு வளாகத்தில் இருந்த சேற்றில் சிக்கியது. பின்னர் கிரேன் மூலம் லாரி அப்புறப்படுத்தப்பட்டது.
மாநாட்டுக்கு வரும் தன்னார்வலர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கும் பணி தனியார் கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இருபாலருக்கும் 250 கழிப்பறைகள் கட்டப்பட்டு, வாகனங்கள் நிறுத்த சாலையின் இருபுறமும் 50 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநாட்டு மேடை அமைக்கும் பணி, சினிமாவுக்கு செட் அமைக்கும் கலை இயக்குனர்களிடம் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு ஏற்பாடுகள் தொடர்பாக ஏற்கனவே காவல் துறையிடம் இருந்து விஜய் தரப்புக்கு 33 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.
இதையடுத்து 17 நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்ற உறுதியுடன் மாநாட்டுக்கு காவல் துறை அனுமதி வழங்கியது. இந்நிலையில் நேற்று இரவு விக்கிரவாண்டி டிஎஸ்பி நந்தகுமார் தவெக மேலும் 5 கேள்விகள் கேட்டு பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு கடிதம் அனுப்பினார்.
அதில், ‘மாநாட்டில் சுமார் 1.5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றும், சுமார் 50,000 நாற்காலிகள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறீர்கள். மேலும் இந்த மாநாட்டில் 1,50,000 பேர் வரை கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக வாய் வார்த்தைகள் கூறுகின்றன.
பொது மக்கள் மற்றும் ரசிகர்கள் மாநாட்டிற்குச் செல்ல பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்றும் உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த மாநாட்டிற்காக விழுப்புரம்-சென்னை சாலையின் இடதுபுறத்தில் 28 ஏக்கர் நிலத்தையும், தென்மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு கூடுதலாக 15 ஏக்கர் நிலத்தையும் தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது.
சென்னை – விழுப்புரம் சாலையின் ஓரத்தில் சுமார் 40 ஏக்கர் நிலம் வடகிழக்கில் இருந்து வரும் வாகனங்கள் நிறுத்தும் இடமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகச் சொன்னீர்கள்.
அனைத்து இடங்களிலும் வாகனம் நிறுத்தும் திட்டம் வழங்கப்பட வேண்டும். மாநாட்டின் போது, வடகிழக்கு பருவமழையால் கனமழை பெய்து வாகன நிறுத்துமிடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளது.
இவ்வாறான நிலையில் வாகனங்களை சிரமமின்றி நிறுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
மாநாட்டுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து மாவட்டம் வாரியாக வரும் வாகனங்கள் (பேருந்து, வேன், கார்) விவரங்களையும் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.