ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே புதிய சுற்றுலா மையம் உருவாக்கப்படவுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான தேர்தல் அறிக்கையில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பா.ஜ.க. வாக்குறுதிகளை பட்டியலிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
இதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார். தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:-
ஜம்முவில் சுற்றுலா மையங்களும் உருவாக்கப்படும்.
5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
ரஜோரி அருகே புதிய சுற்றுலா மையம் உருவாக்கப்படும்.
காஷ்மீரி பண்டிட்டுகள் உள்ளிட்ட இடம்பெயர்ந்த சமூகங்களின் நலன்கள் பாதுகாக்கப்படும்.
திகா லால் விஸ்தபித் சமாஜ் புரணவாஸ் யோஜனா (TLTVPY) காஷ்மீருக்கு பண்டிட் சமூகத்தை பாதுகாப்பாக திரும்பவும் குடியமர்த்தவும் தொடங்கப்படும். தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “கடந்த 10 ஆண்டுகளில், இந்த யூனியன் பிரதேசம் மிகவும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதியாக இருந்து சுற்றுலா தலமாக மாறியுள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாத சூழ்நிலையை பாஜக அழித்துவிட்டது. 1947-ல் இருந்து ஜம்மு காஷ்மீர் நமக்கு நெருக்கமான பகுதியாக இருந்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது, இன்றும், எப்போதும் இருக்கும்.
காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவதில் பாஜக கவனம் செலுத்துகிறது. மற்ற கட்சிகள் சமரச அரசியலை மேற்கொண்டன. பிரிவினைவாதத்திற்கு அவர்களே காரணம்,” என்றார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
முதல்கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 18-ம் தேதியும், 2-ம் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 25-ம் தேதியும், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 1-ம் தேதியும், அக்டோபர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.