திருமயம்: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி குவாரி உரிமையாளர்களால் லாரியில் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் நேற்று திருமயம் தாசில்தார் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு பின் பிரேமலதா நிருபர்களுக்கு அளித்த பேட்டி:- பெரியார் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. நான் இது பற்றி அவர் கிட்ட போய் தான் கேட்கணும். சீமான் அம்பியாக இருப்பார்..திடீரென்று அந்நியனாவார்…அதனால் அவரை கணக்கில் கொள்ளக்கூடாது என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன்.
இறந்த தலைவர்களைப் பற்றி நாம் யாரும் பேசக்கூடாது. அவர்கள் வாழ்ந்து வரலாற்றைப் படைத்து விட்டுச் சென்றனர். உயிருடன் இருப்பவர்களைப் பற்றியும், உயிருடன் இருக்கும் அரசியலைப் பற்றியும் பேசாமல், இறந்தவர்களைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள் என்று நான் பலமுறை விமர்சித்திருக்கிறேன். அதில் எனக்கு உடன்பாடு இல்லை.
விஜய் வெளியே வர வேண்டும், மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. மாட்டின் கோமியம் குறித்து பெரிய விவாதம் நடந்தது. என்னைப் பொறுத்த வரையில் மாட்டின் கோமியம் என்பது இந்துக்கள் புனிதமாகக் கருதும் ஒன்று. இது அனைவருக்கும் தெரியும். உங்களுக்கு பிடித்திருந்தால் குடியுங்கள், இல்லையெனில் குடிக்காதீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.