சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் இந்திரா தோழமை சக்தி இயக்க மாநில கவுன்சில் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் நடந்தது.
தேசிய ஒருங்கிணைப்பாளர் லோகேஷ்குமார் தலைமை வகித்தார். இந்திரா தோழமை சக்தி இயக்க மாநில ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகி கார்த்திக், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சுபத்ராதேவி, ஜெயந்தி, தமிழ்மணி, ஜமால் ஹருனிசா, ஸ்ரீதேவி, காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், மாநில பொதுச் செயலர்கள் தளபதி பாஸ்கர், எஸ்.காண்டீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி:-
ஊழல் வழக்கில் சிறை சென்ற செந்தில்பாலாஜியை கொண்டாடுவது வெட்கக்கேடானது என எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டில் எடப்பாடி பழனிசாமி ஒருநாள் சிறைக்கு செல்லலாம்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் துணை முதல்வர் குறித்து வாரிசு அரசியல் வாதம் செய்யும் நிலையில் பாஜக இல்லை. ராஜ்நாத் சிங்கின் மகன், அமித்ஷாவின் மகன் மற்றும் 60 பாஜக தலைவர்களின் வாரிசுகள் பட்டியலை வெளியிடலாம்.
தமிழகத்தின் துணை முதல்வராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள்.