மால்டா: மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா வகை மாம்பழம் மிகவும் பிரபலமானது. மாம்பழ சீசனின்போது அம்மாநிலத்திலிருந்து மால்டா மாம்பழம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும். ஆனால், இந்த ஆண்டு ஏற்றுமதியில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
பருவநிலை காரணமாக விளைச்சல் சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் 60 சதவீதம் சரிந்துள்ளது. இதனால், விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கும் வெளிநாட்டில் உள்ள இறக்குமதியாளர்களுக்கும் இடையே மாம்பழத்தின் விலை சார்ந்து உடன்பாடு ஏற்படவில்லை. இதன் காரணமாக, இந்த ஆண்டு ஏற்றுமதி சரிந்துள்ளது.
அதே சமயம், மாம்பழ விற்பனையாளர்களுக்கு உள்நாட்டிலேயே நல்ல விலைக்கு விற்க முடிந்துள்ளது. மொத்த விற்பனை விலை சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் 50 முதல் 80 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.