சென்னை: படகுகள் செல்ல முடியாத சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க கருடா, கோத்தாரி, டிராகோ ஆகிய 3 ட்ரோன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆளில்லா விமானங்களின் சோதனை முன்னோட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு இன்று (அக்.16) ஆய்வு செய்தார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:-
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு படகுகள் செல்ல முடியாத சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஆளில்லா விமானம் மூலம் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கான சோதனை முன்னோட்டத்தை இன்று (அக்டோபர் 16) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சி பகுதிகளில் படகுகள் செல்ல முடியாத மழைநீர் தேங்கி தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க கருடா, கோத்தாரி, டிராகோ ஆகிய 3 ஆளில்லா விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆளில்லா விமானங்களில் பால், ரொட்டி, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை 5 கிலோ முதல் 10 கிலோ வரை கொண்டு செல்ல முடியும். மேலும், இந்த ட்ரோன்கள் 40மீ. உயரம் 2 கி.மீ. தூரம் பறக்கிறது.
சோதனை முன்னோட்டத்தின் அடிப்படையில் இந்த ட்ரோன்களின் செயல்பாடு இன்று சோதிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது, மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் எம்.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) டாக்டர் வி.ஜெய சந்திர பானு ரெட்டி, துணை ஆணையர்கள் வி.சிவகிருஷ்ணமூர்த்தி, (பணிகள்), எம்.பிருதிவிராஜ், வருவாய்த்துறை (நிதி) மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.