சென்னை: சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல்-திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி வழித்தடங்களில் தினமும் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.
இவற்றில் தினமும் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். ரயில்வே நிர்வாகம் பரிசீலனை.
பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதல் மின்சார ரயில்களை இயக்க கோரிக்கை எழுந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு 3 புதிய மின்சார ரயில் சேவைகளை தொடங்கவும், 5 மின்சார ரயில்களின் சேவையை நீட்டிக்கவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.
அதன்படி சென்னை புறநகர் பகுதிகளில் 3 மின்சார ரயில் சேவை இன்று (செப்டம்பர் 9) முதல் தொடங்கப்படுகிறது.
ஆவடி – சென்னை சென்ட்ரல் இடையே காலை 9.50 மணிக்கும், சென்ட்ரல் – திருவள்ளூருக்கு காலை 10.40 மணிக்கும், திருவள்ளூர் – சென்ட்ரலுக்கு மாலை 3.50 மணிக்கும் புதிய மின்சார ரயில் சேவை இன்று முதல் தொடங்குகிறது. சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி இடையே மதியம் 12.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சூலூர்பேட்டை வரை நீட்டிக்கப்படும்.
கூடுவாஞ்சேரி – தாம்பரம் இரவு 8.55, 10.10, 10.25, 11.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் கடற்கரை வரை நீட்டிக்கப்படும்.
மேலும், சென்ட்ரல் – அரக்கோணம், கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 28 ரயில்களின் நேரம் 5 நிமிடத்தில் இருந்து 30 நிமிடங்களாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.