சென்னை: தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3-ம் தேதி முதல் மார்ச் 25-ம் தேதி வரை நடந்தது.இதையடுத்து மே 9-ம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய துவங்குவார்கள். தமிழகத்தைப் பொறுத்த வரையில் 171 அரசுக் கல்லூரிகள், 162 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 1233 சுயநிதிக் கல்லூரிகள் என மொத்தம் 1566 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன.
சில தனியார் கல்லூரிகளில் இடங்களுக்காக கடும் போட்டி நிலவுவதால், மாணவர்கள் முன்கூட்டியே விண்ணப்பிப்பது வழக்கமாகிவிட்டது. அரசு கலை மற்றும் தனியார் கல்லூரிகளில், 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகே, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு துவங்கும். இருப்பினும், சில சுயநிதி மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளில் தேர்வு முடிவதற்குள் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கும். அதன்படி சென்னையில் உள்ள சில தன்னாட்சி கல்லூரிகளில் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது.

தேர்வு முடிவுகள் வரவில்லை என்றாலும் பலர் போட்டி போட்டு விண்ணப்பித்து வருவதாக கல்லூரி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. சென்னை லயோலா, எத்திராஜ் போன்ற கல்லூரிகள் மே 9-ம் தேதிக்குப் பிறகு விண்ணப்பப் பதிவைத் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சென்னை டி.ஜி. இதுகுறித்து வைஷ்ணவ் கல்லூரி, கல்லூரி முதல்வர் சந்தோஷ்பாபு கூறியதாவது:-
கடந்த ஒரு வாரமாக ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது. வணிகவியல், கணித அறிவியல், தரவு அறிவியல், நிர்வாகம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்படுவதாகவும், அடிப்படை அறிவியல் தொடர்பான பாடப்பிரிவுகளுக்கு சற்று குறைவான விண்ணப்பங்களே பெறப்படுவதாகவும் தெரிவித்தார்.