சென்னை: தமிழகத்தில் மட்டும் 3,000-க்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி பஸ்கள் உள்ளன. இந்த ஆம்னி பேருந்துகள் அனைத்தும் பண்டிகை நாட்களில் தங்கள் விருப்பத்திற்கேற்ப கட்டணத்தை உயர்த்துகின்றன.
பண்டிகை நாட்கள் மட்டுமின்றி, தொடர் விடுமுறை நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் இதுபோன்ற கட்டண உயர்வுகள் நடப்பது வழக்கம். அரசு பஸ்களில் டிக்கெட் கிடைக்காதவர்களுக்கும், கடைசி நேரத்தில் பயணம் செய்ய முடிவு செய்பவர்களுக்கும் தனியார் ஆம்னி பஸ்கள் தான் ஒரே வழி.
இந்நிலையில், ஓணம் மற்றும் வார கடைசி நாள் என்பதால் தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை முதல் மதுரை வரையிலான டிக்கெட்டுகள் குறைந்தபட்சம் ரூ.1,900 முதல் அதிகபட்சமாக ரூ.4,000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கோவைக்கு குறைந்தபட்சம் ரூ.2000 முதல் அதிகபட்சமாக ரூ.4,500 வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு குறைந்தபட்சம் ரூ.2000 முதல் அதிகபட்சமாக ரூ.4,200 வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு ரூ.2,500 முதல் ரூ.4,500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாதாரண தனியார் ஆம்னி பஸ்களின் கட்டணம் ரூ.2000-ல் இருந்து ரூ.4000 ஆக உயர்ந்துள்ளது.