சென்னை: தமிழக அரசின் முறையான கண்காணிப்பு இல்லாததால், மின் கொள்முதல் இணையதளம் குறைவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இந்திய தலைமை தணிக்கை மற்றும் தணிக்கை அலுவலகம் (சிஏஜி) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும் மின் கொள்முதல் இணையதளம் மூலம் மட்டுமே சரக்கு மற்றும் சேவைகளை வாங்க வேண்டும் என்ற கட்டாயத்தை தமிழக அரசு ஏற்படுத்த தவறிவிட்டது.
திட்டம் செயல்படுத்தப்பட்டு 15 ஆண்டுகள் ஆன பிறகும், இந்த மென்பொருளின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து கண்காணிக்க வேண்டிய பொறுப்பு இல்லை. இதன் விளைவாக மின் கொள்முதல் இணையதளம் குறைவாகவே பயன்படுத்தப்பட்டது.
இதனால் டெண்டர் விடும் பணியில் வெளிப்படைத்தன்மை பாதிக்கப்பட்டது. எனவே, அனைத்து கொள்முதல் நடவடிக்கைகளுக்கும் மின் கொள்முதல் வலைதளத்தை பயன்படுத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
இது தவிர தமிழ்நாடு ஒப்பந்தப் புள்ளிகள் வெளிப்படைத்தன்மை மற்றும் கோரிக்கைச் சட்டத்தின் அடிப்படையில் கால வரம்பு விவரங்களை இணைக்கும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்படவில்லை.
உள்நாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் எந்த வசதியும் மென்பொருளில் இல்லை. ஒரே விலையில் டெண்டர் கோரும் பல ஒப்பந்ததாரர்களைக் கையாளும் வசதி இணையதளத்தில் இல்லை.
எனவே, பொது இணையதளத்தில் உள்ள தகவல்களை எளிதாகப் பெற தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதேபோல், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் டெண்டருக்கான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கும், விடுபட்ட சான்றுகளைக் கோருவதற்கும் மின் கொள்முதல் இணையதளத்தில் உள்ள வசதிகள் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை.
இதை சரி செய்து, இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மட்டுமே டெண்டர்களை மதிப்பீடு செய்ய வேண்டும். மின் கொள்முதல் இணையதளத்தில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க ஒரு பொறுப்பு மையம் உருவாக்கப்பட வேண்டும்.
மேலும், கொள்முதல் நிறுவனங்கள் ஒப்பந்ததாரர்கள் தங்கள் அலுவலக கணினிகளில் டெண்டர்களை சமர்ப்பிக்க அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.