சென்னை: தாம்பரத்தில் பிஎப் (ஊழியர் வருங்கால வைப்பு நிதி) அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருமாறு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி நேரில் சந்தித்து பேசினார்.
அதில், தாம்பரத்தில் இயங்கி வரும் தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகம் போதிய இடமின்றி வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், அதிகாரிகள், ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.
இடப்பற்றாக்குறை வேலை செய்வதிலும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகிறது. எனவே பிஎஸ்என்எல் அலுவலகம் உள்ள இடத்துக்கு பிஎப் அலுவலகத்தை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதேபோல், பணியாளர்கள் பற்றாக்குறையை நீக்கி, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அமைச்சரிடம் மனு அளித்தனர்.
இந்த சந்திப்பின் போது சங்க நிர்வாகிகள் சந்திரசேகர், வேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.