திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி அஜித் குமார், போலீசாரின் சித்திரவதையால் உயிரிழந்ததுடன், அவரது மரணம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அஜித்தின் மரணத்திற்கு காரணமாக நகை இழப்புக்கான புகார் அளித்த நிகிதா மீது பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, நிகிதா தற்போது தனது நிலையை தெளிவுபடுத்தியுள்ளார். புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “நான் எந்த உயரதிகாரியிடமும் உதவி கேட்கவில்லை. குலதெய்வம் சத்தியமாக, தலைமைச் செயலக அதிகாரிகளோ, டெல்லி அதிகாரிகளோ எனக்குத் தெரியாது. எந்த அதிகாரிக்கும் போன் செய்து உதவி கேட்டதில்லை” என கூறினார்.

நிகிதா மேலும் கூறியதாவது, “நான் புகார் அளித்தபோது எந்த பொய்யும் கூறவில்லை. சனிக்கிழமை அன்று சில தகவல்களை கூறினர், ஆனால் அந்த சந்தேகம் அஜித் குமார் ஏதேனும் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் மட்டுமே வந்தது. அவரிடம் கார் கொடுத்திருந்தேன் என்பதால் ஒரு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அவரை தவறாக நடக்கச் சொல்லவோ, அவரை அழுத்தம் கொடுங்கள் என காவலர்களிடம் கூறியதில்லை. இப்போது இந்த அளவுக்கு விஷயம் நடக்கும் எனக்குத் தெரியாது. அவரை இழந்ததற்காக அவருடைய தாயாரிடம் மன்னிப்பு கோருகிறேன்” என உணர்ச்சிவசப்பட்டு தெரிவித்தார்.
நிகிதா மேலும் கூறுகையில், “நகை என்னுடையது அல்ல, என் அம்மாவின் நகை. அதைப் பற்றியே புகார் கொடுத்தோம். அஜித் குமாரிடம் விசாரணை நடக்கும் போது நான் அங்கு இருந்தேன். அந்த நேரத்தில் அவர் மீது நடந்த தாக்குதல் பற்றி எங்களுக்குச் சொல்லப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை போலீசார் வந்து, டிஎஸ்பி அழைக்கிறார் என்று கூறி அழைத்துச் சென்றனர். பிறகு நீதிபதியை சந்தித்து விசாரணையில் அனைத்தையும் தெரிவித்தோம். பின்னர் அஜித் உயிரிழந்துவிட்டார் என சொல்லப்பட்டது. என் அம்மா மகனே என்று அழ ஆரம்பித்தார்” என்றார்.
இந்த வழக்கில் சமூக ஊடகங்களில் பரவும் பல்வேறு தகவல்களை மறுக்கும்படியும், தனக்கு அதில் எதுவும் தொடர்பில்லை என்பதையும் நிகிதா வலியுறுத்துகிறார். தற்போது இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், உண்மை விரைவில் வெளிவரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.