சென்னை: பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள உணவுப் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் வரும் 13ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. அப்போது குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்லிடப்பேசி எண் பதிவு, மாற்றம் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்படும்.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொது விநியோகத் திட்டப் பயன்களை பொதுமக்கள் எளிதாகப் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மாதந்தோறும் குறைதீர் முகாம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 2024 ஜூலை மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையர்கள் அலுவலகங்களில் வரும் 13ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்லிடப்பேசி எண் பதிவு, குடும்ப அட்டைகளில் மாற்றம் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் செல்ல முடியாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும், பொதுவிநியோகக் கடைகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள், சேவைகளின் செயல்பாடுகளில் குறைபாடுகள் இருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்தால், குறைகளை விரைந்து தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்தச் சேவையைப் பெறலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.