சென்னை: சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை – சென்னை சென்ட்ரல் வரை மொத்தம் 54 கி.மீ. தூரத்திற்கு தலா 4 பெட்டிகள் கொண்ட 45 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 2.80 லட்சம் முதல் 3 லட்சம் பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்கின்றனர். நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதற்கிடையில், மெட்ரோ பெட்டிகளின் எண்ணிக்கையை 4ல் இருந்து 6 ஆக உயர்த்தவும், 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்களை வாங்கவும் திட்டமிடப்பட்டது. இது தொடர்பாக அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த கருத்துருவுக்கு ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, 2028-ம் ஆண்டுக்கான திட்டமிடப்பட்ட பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய ரூ.2,820.90 கோடி செலவில் 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில்கள் வாங்கப்பட உள்ளன.
இதற்காக சர்வதேச நிதி நிறுவனங்களிடம் இருந்து நிதி பெறப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, 28 கூடுதல் மெட்ரோ ரயில்களை வாங்க நிதி ஆயோக் கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், மெட்ரோ ரயில்களை வாங்க மத்திய நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் கழக அதிகாரிகள் கூறியதாவது: 6 பெட்டிகள் அல்லது கூடுதல் மெட்ரோ ரயில்களை இயக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, கூடுதலாக 28 மெட்ரோ ரயில்களை வாங்க நிதியுதவி கேட்டு ஆசிய வளர்ச்சி வங்கிக்கு கடிதம் எழுதப்படும். அடுத்த ஆண்டுக்குள், ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு, புதிய பெட்டிகள் தயாரிக்க 2 ஆண்டுகள் வரை ஆகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.