சென்னை: தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு விடுமுறை முடிந்து ஜூன் 2 ஆம் தேதி வகுப்புகள் மீண்டும் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வியாண்டுக்கான 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் முதல் ஏப்ரல் வரை நடைபெற்றன. 1 முதல் 3 ஆம் வகுப்புகளுக்கான ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் 15 முதல் 21 வரை காலை நேரத்தில் நடந்தன. 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் 9 முதல் 21 வரை மதிய நேரத்தில் நடைபெற்றன.
1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 22 ஆம் தேதியில் இருந்தும், 6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதியில் இருந்தும் விடுமுறை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியான அறிவிப்பில், 6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான பள்ளி இறுதி தேர்வு ஏப்ரல் 24 அன்று முடிவடையும் என்றும், அதற்குப் பிறகு விடுமுறை தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதற்குப் பிறகு, ஆசிரியர்கள் விடைதாள் திருத்தும் பணிகளை முடிக்க வேண்டும் என்பதால், அவர்களுக்கான இறுதி வேலை நாள் ஏப்ரல் 30 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2025–2026ஆம் கல்வியாண்டின் வகுப்புகள் ஜூன் 2 ஆம் தேதி, திங்கள் கிழமை அன்று தொடங்கும் எனவும், அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு மொத்தமாக 38 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வெயிலின் தீவிரம் அதிகமாக இருந்தால், பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் ஏற்படக்கூடும் என்பதற்கான எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த ஆண்டுகளிலும் இதேபோல் வெயில் காரணமாக பள்ளிகள் ஜூன் முதல் வாரம் பிறகு திறக்கப்பட்ட அனுபவம் உள்ளது.