சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவினாலும், வெப்ப சலனம் காரணமாக சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்துள்ளது. தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, ராஜபாளையம், மதுரை, திண்டுக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை, முத்துப்பேட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, நெய்வேலி, புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் முதல் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

வெப்பநிலையை பொறுத்தவரை ஈரோடு, கரூர், பரமத்தி, வேலூர் மாவட்டங்களில் நேற்று அதிகபட்சமாக 104 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. தர்மபுரி, சேலம், மதுரை மாவட்டங்களில் 102 டிகிரியும், கோவை, திருச்சி, திருத்தணியில் 100 டிகிரியும், தர்மபுரியில் 99 டிகிரியும், சென்னையில் 98 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல அழுத்தம் கிழக்கு மற்றும் மேற்கு காற்று சந்திக்கும் பகுதியில் உள்ளது.
இதன் காரணமாக நேற்று சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்தது, இன்றும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். மே 2ம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலையை பொறுத்த வரையில் இன்று முதல் மே 1-ம் தேதி வரை சில இடங்களில் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மே 1-ம் தேதி வரை அதிக வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதத்துடன் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அசௌகரியம் ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரியாக இருக்கும்.