தருமபுரி; காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழை, கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கும். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 3,191 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 4,013 கனஅடியாக உயர்ந்தது. காவிரிக் கரையோர மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் திறப்பைவிட, நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கடந்த 7-ம் தேதி அணையின் நீர்மட்டம் 40.05 அடியாக இருந்த நிலையில், படிப்படியாக நீர்மட்டம் அதிகரித்து நேற்று 42.76 அடியாக உயர்ந்தது. கடந்த ஒரு வாரத்தில் நீர்மட்டம் 2.71 அடி உயர்ந்துள்ளது. அதேபோல, கடந்த 7-ம் தேதி12.11 டிஎம்சியாக இருந்த நீர்இருப்பு உயர்ந்து நேற்று 13.55 டிஎம்சியாக அதிகரித்தது. கடந்தஒரு வாரத்தில் நீர்இருப்பு 1.44 டிஎம்சி அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் நிலவரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் நீர்வரத்து விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இந்நிலையில், நேற்றுமாலை நீர்வரத்து 4,000 கன அடியாகக் குறைந்தது.
கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதையடுத்து, கேஎஸ்ஆர், கபினி அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்தநீரானது தமிழக எல்லைக்குள் இன்று முதல் வர வாய்ப்புள்ளது என்றும், வரும் நாட்களில் நீர் வரத்து அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.