சென்னை மெரினா கடற்கரையில் கடல் அலையில் சிக்கிய 2 சிறுவர்களை அங்குள்ள மீட்புக் குழுவினர் மீட்டனர். சென்னை மெரினாவில் ஆழ்துளை பகுதிக்கு சென்று குளிக்க வேண்டாம் என அவ்வப்போது விழிப்புணர்வு வழங்கப்பட்டாலும், ஆழ்துளை பகுதிக்கு சென்று சிறுவர், சிறுமிகள் அவ்வப்போது ஆபத்தை சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை பேசின்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட பெரிய அலையால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
இதையடுத்து, மீட்பு குழுவினர் உடனடியாக கடலுக்குள் சென்று இருவரின் உயிரையும் காப்பாற்றினர். சிறுவர்கள் இருவரும் தற்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வருவதாகவும், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் தெரிய வந்தது.
விசாரணையில், இரு சிறுவர்களும் சென்னை பேசின்பிரிட்ஜ் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதும் தெரியவந்தது.