தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் காற்றாலை இறகுகளை கையாள்வதில் புதிய சாதனை படைத்துள்ளது. 2024-2025 நிதியாண்டின் தற்போதைய நிலையில் 1,869 காற்றாலை இறகுகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 40% அதிகம் ஆகும். கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 1,332 இறகுகள் ஏற்றுமதி செய்யப்பட்டதை விட இவ்வாண்டு குறிப்பிடத்தக்க அளவிலான வளர்ச்சி காணப்பட்டுள்ளது.
இந்த இறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் பெங்களூரு, திருச்சி, மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் தயாரிக்கப்பட்டு, அமெரிக்கா, துருக்கி, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், பின்லாந்து மற்றும் பல ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இது தொடர்பாக வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோகித் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்களை கையாள்வதில் துறைமுகத்திற்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்புகளும், வேகமாக மற்றும் பாதுகாப்பாக கையாளும் திறன், சிறந்த மனிதவளம் மற்றும் சிறப்பான செயல்பாடு ஆகியவை துணைபுரிந்துள்ளன” என தெரிவித்துள்ளார்.
வ.உ.சி. துறைமுகம் இந்த சாதனை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்துள்ள கப்பல் முகவர்கள், போக்குவரத்து உரிமையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு அவர் பாராட்டுகள் தெரிவித்தார். 2024-2025 நிதியாண்டின் டிசம்பர் மாதம் மட்டும் 294 காற்றாலை இறகுகள் ஏற்றுமதி செய்யப்பட்டு, கடந்த ஆண்டை விட 234% அதிக வளர்ச்சி காட்டியுள்ளது.
இந்த சாதனையை அடைவதன் மூலம், வ.உ.சி. துறைமுகம் காற்றாலை இறகுகளின் ஏற்றுமதிக்கு முக்கியமான துறைமுகமாக திகழ்ந்து, உலகளவில் பசுமை எரிசக்தி பயிற்சியில் தன் பங்கு தொடர்வதை உறுதி செய்துள்ளது.