புதுடெல்லி: டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவோர் பயன்பெறும் வகையில் ஒரே மாதிரியான கட்டணக் கொள்கையை சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உருவாக்கி வருகிறது. இதன் மூலம் பயணிகள் சந்திக்கும் பிரச்னைகள் தீரும். இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு இப்போது அமெரிக்காவிற்கு இணையாக உள்ளது.
தடையற்ற உலகளாவிய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பு அடிப்படையிலான கட்டண வசூல் முறையை முதலில் தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்படுத்த அமைச்சகம் முடிவு செய்துள்ளது. சமூக வலைதளங்களில் பயணிகள் அளிக்கும் புகார்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் சுமார் 60 சதவீத போக்குவரத்தை தனியார் கார்கள் கொண்டிருந்தாலும், இந்த வாகனங்களின் சுங்கவரி வருவாயின் பங்கு வெறும் 20 முதல் 26 சதவீதம் மட்டுமே உள்ளது. “கடந்த 10 ஆண்டுகளில், நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் அதிகரித்துள்ளது. இது அடிக்கடி பயனர் அதிருப்தியை அதிகரிக்கிறது,” என்று அவர் கூறினார்.