கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பிக்கு அருகிலுள்ள ஓங்கல்லூர் மஞ்சுளால் தளி மகாதேவர் கோவிலை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான இந்த கோவில், தமிழகத்துடன் கலாச்சார, ஆன்மிக பிணைப்பையும் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதன் வரலாற்றுச் சிறப்பை மதித்து, தற்போது தொல்லியல் துறை மூலமாக இந்த அறிவிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

1958ஆம் ஆண்டு அமலுக்கு வந்த பண்டைய நினைவுச்சின்னங்கள் சட்டத்தின் கீழ், இந்த கோவிலுக்கு பாதுகாப்பு மற்றும் வரலாற்று மரபு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்த முடிவைத் தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வந்துள்ள நிலையில், இந்த இடம் தேசிய அளவில் பாதுகாக்கப்படும் நினைவுச்சின்னமாக அமைய உள்ளது.
இந்த அறிவிப்பு தொடர்பாக யாரேனும் எதிர்ப்பு தெரிவிக்க விரும்பினால், அவர்கள் இரண்டு மாதங்களுக்குள் தொல்லியல் துறையை தொடர்புகொண்டு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இதனுடன், கோவிலின் அறக்கட்டளை மற்றும் நிர்வாக குழு முன்வைத்த கோரிக்கையை ஏற்று மத்திய கலாச்சார அமைச்சகம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
இந்த கோவில் பாரம்பரிய கட்டிடக்கலை, புராணங்கள் மற்றும் சமூக மரபுகளுடன் இணைந்த ஒரு முக்கியமான ஆன்மிகத்தலமாக இருக்கிறது. இப்போது தேசிய நினைவுச்சின்னமாக இது அறிவிக்கப்படுவதால், பாலக்காடு மாவட்டம் மட்டும் கேரளா மற்றும் தெற்கிந்தியாவுக்கும் பெருமை சேரும்.