பெய்ஜிங்: சீன ராணுவத்தின் சக்திவாய்ந்த ராக்கெட் படையை அதிபர் ஜி ஜின்பிங் நேற்று திடீரென ஆய்வு செய்தார். சீன ராணுவத்தில் தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகியவற்றுடன் ராக்கெட் படையும் 2015-ல் உருவாக்கப்பட்டது.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் ராணுவ சீர்திருத்த இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த படை உருவாக்கப்பட்டது. அணு ஆயுதங்கள் உட்பட பல குறுகிய மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள் இதில் அடங்கும். இதனால், ராக்கெட் படையே சீன ராணுவத்தின் சக்தி வாய்ந்த படையாகும்.
அதே நேரத்தில், கடந்த ஒரு வருடமாக ராக்கெட் படையின் உயர் அதிகாரிகள் மீது அடிக்கடி ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஊழல் புகார் காரணமாக ஓராண்டில் 7 ராணுவ தளபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் பலர் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள்.
ஊழல் அதிகாரிகளை நீக்கிவிட்டு, அந்நாட்டு அதிபரும், ராணுவத் தளபதியுமான ஜி ஜின்பிங் நேற்று ஹெபேயில் ராக்கெட் படையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ராக்கெட் படை அதன் தடுப்பு மற்றும் போர் திறன்களை வலுப்படுத்தவும், சீன மக்கள் வழங்கிய பணிகளை உறுதியுடன் நிறைவேற்றவும் அவர் வலியுறுத்தினார்.