வாஷிங்டன்: ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியிடம் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியும் டிரம்பும் தொலைபேசியில் பேசினர். இது குறித்து டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நானும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியும் இன்று தொலைபேசியில் பேசினோம்.
சமாதானம்
அமெரிக்க அதிபர் பதவிக்கான குடியரசுக் கட்சியின் வேட்பாளராக நான் பரிந்துரைக்கப்பட்டதற்கு அவர் என்னை வாழ்த்தினார். அமெரிக்காவின் அடுத்த அதிபராக நான் உலகிற்கு அமைதியை ஏற்படுத்துவேன். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவேன். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றியுடன் இருப்போம்
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக டிரம்ப் நியமிக்கப்பட்டதற்கு நான் வாழ்த்து தெரிவித்தேன்.
டிரம்ப் மீதான கொலை முயற்சிக்கும் கண்டனம் தெரிவித்தேன். ரஷ்ய பயங்கரவாதத்திற்கு எதிராக நமது திறன்களை வலுப்படுத்த உதவிய அமெரிக்காவிற்கு உக்ரைன் எப்போதும் நன்றியுடன் இருக்கும். இதை ஜெலென்ஸ்கி கூறினார்.