வால்பாறை: தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில், வால்பாறை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வால்பாறை பகுதியில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் வால்பாறை பகுதியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாறை, பொள்ளாச்சி, ஆழியாறு, ஆனைமலை, வேட்டக்காரன் புதூர், ஒடையக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4.30 மணியளவில் பொள்ளாச்சி – வால்பாறை மலைப்பாதையில் 23 மற்றும் 24வது கொண்டை ஊசி வளைவு இடையே நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தன. மேலும் சாலையில் மண் மற்றும் பெரிய கற்கள் விழுந்ததால் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலை 7 மணியளவில் தீயணைப்புத் துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் மரங்களை வெட்டி, பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையில் தேங்கிய மண், கற்களை அகற்றினர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் மலைப்பாதையில் நீண்ட நேரம் காத்திருந்தன. இதேபோல் ஆனைமலை தாலுகா ஒடையகுளம் அறிவொளி நகரில் வசிக்கும் செந்தில்குமார் என்பவரது வீட்டின் சுவர் இன்று அதிகாலை 2 மணியளவில் பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த செந்தில்குமாரின் குடும்பத்தினர் பத்திரமாக உயிர் தப்பினர்.
அப்போது வால்பாறை எம்எல்ஏ அமுல்கந்தசாமி சேதமடைந்த வீட்டை ஆய்வு செய்தார். வால்பாறையில் பெய்த கனமழையால் காவிரியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த 2 நாட்களாக சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுத்த வனத்துறையினர், இன்று அதிகாலை முதலே பாதுகாப்புக் கம்பிகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், இன்று 3வது நாளாக அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் தடையை மீறி அருவி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லாமல் இருக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று காலை 8 மணி நிலவரப்படி பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் பெய்த மழையின் விவரம் (மில்லிமீட்டரில்) : வால்பாறை-169, சோலையார் – 140, பரம்பிக்குளம் – 80, ஆழியாறு – 49, மேல்னியாறு – 232, கிளினியாறு – 170, காதம்பரை -5, சர்க்கார்பட்டி – 71, மணக்கடவு -92, தூணகடவு -69, பெருவாரிப்பள்ளம் -87, மேல ஆழியாறு -10, பொள்ளாச்சி -86.3, நல்லாறு -54, நெகமம் -37, சுல்தான்பேட்டை -15, பெதப்பம்பட்டி -114 பதிவாகின. வால்பாறையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கூகங்கல் ஆறு, வாழைத்தோட்டம் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இதனால் நீர்நிலைகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும், ஆற்றுப் பகுதிகளில் போலீஸார், வருவாய்த் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.