தமிழில் தலைப்பு வைக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று ‘அகமொழி விழிகள்’ நிகழ்ச்சியில் கே.ராஜன் பேசினார். சச்சஸ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அகமொழி விழிகள்’. சசீந்திர கே. ஷங்கர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை மே 9-ம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதன் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் சில சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கே.ராஜன் பேசுகையில், “இந்தப் பட விழாவுக்கு கேரளாவைச் சேர்ந்த நண்பர்கள் என்னை அழைத்தார்கள். மலையாளப் படம் டப்பிங் என்று நினைத்து வந்தேன். ஆனால் மிக அழகாக தமிழ்ப் படமாக்கி இருக்கிறார்கள். மிக அருமையாக எடுத்திருக்கிறார்கள். டிரைலர், மூன்று பாடல்கள் எல்லாம் மிக அருமையாக இருந்தது.. குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்.

இந்த ஆண்டு 4 படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு 220 படங்களில் 8 படங்கள் மட்டுமே வெற்றி பெற்றது. சிறிய படங்களில் 15 படங்கள் வெற்றி பெற்றுள்ளன. பெரிய ஹீரோ பின்னால் போனால் படம் ஓடாது. கதை நன்றாக இருந்தால்தான் பலன் கிடைக்கும். நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து இப்படி ஒரு புது ஹீரோ, ஹீரோயினை போட்டால் படம் வேலை செய்யும். ‘அகமொழி விழிகள்’ அவ்வளவு அழகான தலைப்பு. அஜித் எப்போதும் தமிழ் பட்டத்தையே கொடுப்பார்.
ஆனால் சில இயக்குனர்கள் ‘குட் பேட் அக்லி’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள். சிவகுமாரின் மகன் சூர்யா தற்போது ‘ரெட்ரோ’ என்ற பட்டத்தை வைத்துள்ளார். தமிழில் தலைப்பு வைக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.” அவர்கள் போய்விட்டார்கள். கேரளா அண்ணன் தமிழில் தலைப்பு வைக்கிறார். தமிழனுக்குத் தமிழில் தலைப்பு வைக்கத் தெரியாது” என்றார் கே.ராஜன்.