சென்னை: ‘விழித்திரை சிகிச்சையில் முன்னேற்றங்கள்’ என்ற கருப்பொருளில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நேற்று சென்னை கிண்டியில் ‘ரெட்டிகான் 2025’ என்ற விழித்திரை சிகிச்சை குறித்த மாநாட்டை நடத்தியது. டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை தலைவர் அமர் அகர்வால் தலைமையில், தலைமை மருத்துவ அதிகாரி அஸ்வின் அகர்வால் முன்னிலையில் இந்த மாநாடு நடைபெற்றது. வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் அகில இந்திய கண் மருத்துவர்கள் சங்க துணைத் தலைவர் மோகன் ராஜன் ஆகியோர் இந்நிகழ்வைத் தொடங்கி வைத்தனர்.
நாடு முழுவதிலுமிருந்து 30-க்கும் மேற்பட்ட விழித்திரை சிகிச்சை நிபுணர்கள் முக்கிய உரைகளை நிகழ்த்தினர். மொத்தம் 1,500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர். மருத்துவமனையின் மருத்துவ சேவைகளின் பிராந்தியத் தலைவர் எஸ். சௌந்தர்யா, கண் மருத்துவம் – விழித்திரை அறுவை சிகிச்சைத் தலைவர் மனோஜ் காத்ரி, மருத்துவர்கள் பர்வீன் சென், பத்மா பிரீத்தா, திரிவேணி மற்றும் பலர் பங்கேற்றனர்.

“இந்த மாநாடு விழித்திரை சிகிச்சையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து கண் மருத்துவர்களுக்குத் தெரிவிக்க ஒரு தளமாக செயல்படுகிறது. இது கண் பராமரிப்பில் இந்தியாவின் இணையற்ற திறனையும் நிறுவுகிறது” என்று அமர் அகர்வால் கூறினார். “நாடு முழுவதும் உள்ள 35,000 கண் மருத்துவர்களில், 2,000 பேர் மட்டுமே விழித்திரை நிபுணர்கள். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க, செயற்கை நுண்ணறிவு (AI) ஐப் பயன்படுத்தி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு விழித்திரை சிகிச்சையில் பயிற்சி அளிக்கப்படுகிறது” என்று டாக்டர் மோகன் ராஜன் கூறினார்.
நாட்டில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 100 மில்லியன் மக்களில், 20 மில்லியன் பேருக்கு விழித்திரை பாதிப்பு உள்ளது. “முன்கூட்டிய குழந்தைகளும் விழித்திரை சேதத்தை உருவாக்கும் அபாயத்தில் உள்ளனர். முன்கூட்டியே கண்டறிதல் விழித்திரை சேதத்தைத் தடுக்கலாம்,” என்று அவர் கூறினார்.