பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பாக, முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மாணவர்கள் நீட் தேர்வை எழுதி, எதிர்காலத்தை நோக்கி நகர்ந்து வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வை ரத்து செய்வதாகக் கூறினர். அவர்கள் ஆட்சிக்கு வந்து, இப்போது 5-வது நீட் தேர்வு நடத்தப்படுகிறது. திமுக சொல்வதைச் செய்வதில்லை. இனிமேல் அவர்களால் எதுவும் செய்ய முடியாது. மக்களுக்குச் செலவு செய்வதற்குப் பதிலாக, பாராட்டு விழாக்கள் மற்றும் விளம்பரங்களுக்காக பணத்தைச் செலவிடுகிறார்கள். பாஜக அதிமுக மீது அழுத்தம் கொடுப்பதாக ஸ்டாலின் கூறுகிறார். உண்மையில், அதிமுக-பாஜக கூட்டணி உருவான பிறகு, அதிக அழுத்தத்தில் இருப்பவர் ஸ்டாலின்.

“கல்வி நிறுவனங்களை மூடநம்பிக்கை மற்றும் மத சடங்குகள் நடைபெறும் இடங்களாக மாற்றக்கூடாது. அங்கு சமூக நீதி இருக்க வேண்டும்” என்று ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் அவரது ஆட்சியில்தான் பள்ளிகளில் மாணவர்களின் பைகளில் அறிவுக்குப் பதிலாக அரிவாள் இருக்கிறது. ஒற்றுமைக்குப் பதிலாக சாதிப் பாகுபாடு இருக்கிறது. வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக மோடி விமர்சிக்கப்பட்டார். அவரது நல்லெண்ணப் பயணங்கள் இன்று நமக்கு உதவுகின்றன.
உலகின் பல நாடுகள் இப்போது இந்தியாவின் பக்கம் உள்ளன. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக இந்தியாவுக்கு ஆதரவாக 30 நாடுகள் குரல் எழுப்பியுள்ளன. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து மே 5-ம் தேதி மாலை 5 மணிக்கு தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும். சென்னையில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கோவையில் முன்னாள் தலைவர் அண்ணாமலை, மதுரையில் பொன். ராதாகிருஷ்ணன், திண்டுக்கல்லில் தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெறும்.
தமிழகத்தில் பாகிஸ்தானியர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை தீவிரமாகக் கண்டுபிடித்து அவர்களை வெளியேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.